நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஆரம்பிக்கப்பட்டு 21 மாதங்களுக்குப் பிறகு, முதல்முறையாக மூன்று முக்கிய அணிகளுக்கான மாவட்ட நிர்வாகிகளை நியமித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கரூர் துயரசம்பவம் , மற்றும் புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகள் குறித்து கட்சியில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக, கட்சி தொடங்கியும், முக்கியப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிக்காமல் விஜய் இழுத்தடிப்பதாகச் சர்ச்சைகள் கிளம்பியதால், இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, த.வெ.க. தலைமை, முதற்கட்டமாக தற்போது மகளிர் அணி, மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி ஆகிய மூன்று அணிகளுக்கும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ளது. இதன் மூலம், த.வெ.க. தனது அரசியல் நகர்வுகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.
புதிய நிர்வாகிகள் நியமனத்தின் மூலம், கட்சியை மாநிலம் முழுவதும் கட்டமைக்கும் பணியில் விஜய் கவனம் செலுத்தி வருவதாகவும், வரும் நாட்களில் இதர அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
