அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இன்று (நவம்பர் 3) செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தி.மு.க. மட்டுமல்லாமல் அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுவதாகப் பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

“தி.மு.க.வில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை. அ.தி.மு.க.விலும் குடும்ப அரசியல் இருக்கிறது” என்று அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார். குறிப்பாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் (இ.பி.எஸ்.) மகன், மைத்துனர் மற்றும் மாப்பிள்ளையின் தலையீடு கட்சியின் நடவடிக்கைகளில் இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை என்றும் செங்கோட்டையன் குறை கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இ.பி.எஸ்.ஸின் குடும்பத் தலையீடுகளைச் சுட்டிக்காட்டி, “தன்னால் (இ.பி.எஸ்.) முடியாததை முடியும் என்று தன்னையும், மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது” என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இ.பி.எஸ். தனது குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரிலேயே தன்னிச்சையாகச் செயல்படுவதாக செங்கோட்டையன் மறைமுகமாகச் சாடியுள்ளார்.

அ.தி.மு.க.வில் நிலவிவரும் உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் குடும்ப அரசியல் குறித்து வெளிப்படையாகப் பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.