சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் இல்லாத ஒரு நிகழ்வாக, அவர் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் டக் அவுட் (பூஜ்ய ரன்களில் அவுட்) ஆகியுள்ளார். பெர்த் ஒருநாள் போட்டியில் 8 பந்துகளில் ரன் எடுக்காமல் வெளியேறிய அவர், அடிலெய்ட் போட்டியில் 4 பந்துகளில் டக் அவுட் ஆனார். இந்த மோசமான ஆட்டத்தால் ரசிகர்கள் மத்தியில் பலத்த சலசலப்பு எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில், “சர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் காலம் முடிந்துவிட்டதா?” என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

இரண்டாவது டக் அவுட்டுக்கு பிறகு, ஆடையறைக்குத் திரும்பும்போது கோலி செய்த ஒரு சைகை இந்த ஓய்வு குறித்த சலசலப்புக்கு மேலும் வலு சேர்த்தது. அவர் கையுறை அணிந்தபடி ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்தார். இது, அவர் ரசிகர்களிடம் இருந்து விடைபெறுவதை உணர்த்துகிறாரா என்ற கேள்வியை எழுப்பியது. தற்போது, இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் வலுவான போட்டி அளித்து வருவதால், கோலியின் ஆட்டத்திறன் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகிறது. அவரது அந்தஸ்து எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அணியில் அவருக்கான இடம் இனி உத்தரவாதம் இல்லை என்ற நிலையே உள்ளது.

தொடர் தொடங்குவதற்கு முன்பு, தான் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி கோலி தைரியமாகப் பேசியிருந்தார். “முன்பை விட இப்போது மிகவும் ஃபிட்டாகவும், புத்துணர்ச்சியுடனும் உணர்கிறேன். என் உடலில் அசைவுகள் சரியாக இருந்தால், ஆட்டத்தில் என் முடிவுகள் சரியாக இருக்கும். 2027 ஒருநாள் உலகக் கோப்பை கனவை நான் கைவிடவில்லை” என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், களத்தில் அவரது தற்போதைய செயல்பாடு, அவர் பேசிய வார்த்தைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லை. உலகக் கோப்பைதான் அவரது நோக்கமாக இருந்தாலும், தற்போதைய ஃபார்ம் காரணமாக, அணியில் இடம்பிடிப்பது அவருக்குச் சவாலானதாக இருக்கும்.