கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் நடைபெற்ற வித்தியாசமான திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. ஹொரபேட்டை பகுதியைச் சேர்ந்த வாசீம் சேக் (25) என்ற இளைஞர், கோவாவில் வேலை பார்த்தபோது ஷைபா சேக் மற்றும் ஜன்னத் கந்தர் என்ற இரண்டு இளம்பெண்களை சந்தித்தார்.

மூவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். நட்பு படிப்படியாக ஆழமான உறவாக மாறியதால், திருமணம் செய்யும் முடிவை வாசீம் எடுத்தார். ஆனால் அதிர்ச்சி என்னவென்றால் அந்த இரண்டு பெண்களும் ஒரே நேரத்தில் வாசீமை மணம் முடிக்க விருப்பம் தெரிவித்தனர். முதலில் தயங்கிய வாசீம், இருவரின் பிடிவாதத்தால் இறுதியில் சம்மதித்து விட்டார்.

இதற்காக மூவரின் குடும்பத்தினரிடமும் ஆலோசனை நடத்தப்பட்டு, அனைவரும் இதை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து அக்டோபர் 16-ந்தேதி ஹொரபேட்டை பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அபூர்வ திருமணம் நடைபெற்றது. ஒரே மேடையில் வாசீம் சேக், தனது தோழிகளான ஷைபா சேக் மற்றும் ஜன்னத் கந்தர் ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து, தன் மனைவிகளாக ஏற்றுக்கொண்டார்.

திருமணத்துக்குப் பின் நடைபெற்ற வரவேற்பு விழாவில் மூவரும் இணைந்து மேடையில் நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர். இந்த வித்தியாசமான திருமண விழாவின் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.