இந்தியாவில் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு தூக்கிலிடுதல் வழிமுறையிலேயே தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்த முறை வலி நிறைந்ததாக இருப்பதால், அதற்கு மாற்றாக விஷ ஊசி, மின்சாரம் பாய்ச்சுதல், விஷ வாயு அல்லது துப்பாக்கிச்சூடு போன்ற முறைகளை பரிசீலிக்க வேண்டும் என வக்கீல் ரிஷி மல்கோத்ரா தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் ரிஷி மல்கோத்ரா வாதிடுகையில்,  “தூக்கிலிடுவது மனிதநேயமற்றதும், வேதனை மிகுந்ததுமான தண்டனை முறையாகும். இதில் கைதி சுமார் 40 நிமிடங்கள் வரை தொங்கவிடப்படுகிறார்.

உலகின் பல நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 49-இல் விஷ ஊசி வழிமுறையே பயன்படுத்தப்படுகிறது.எனவே, இந்தியாவிலும் அதேபோன்ற மனிதநேயமான முறையை பின்பற்ற வேண்டும். குறைந்தது, தூக்கு அல்லது விஷ ஊசி ஆகியவற்றில் எதை தேர்ந்தெடுக்க விரும்புகிறாரோ என்பதை கைதியிடம் தீர்மானிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.

இதற்கு எதிராக மத்திய அரசின் தரப்பில் வாதாடிய சட்ட அதிகாரி “விஷ ஊசி வழிமுறை இந்திய சூழலில் நடைமுறைக்கு வருவது கடினம்,” என தெரிவித்தார். இதனை தொடர்ந்து அமர்வில் நீதிபதிகள், “காலப்போக்கில் உலகம் மாறி வருகிறது. ஆனால் அரசு காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப தன்னைப் பரிணமிக்க தயாராக இல்லை என்பதுதான் பிரச்சினை,” எனக் குறிப்பிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை பின்னர் ஒத்தி வைத்தனர்.