தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அனைவரும் உற்சாகத்துடன் பண்டிகை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த மகிழ்ச்சி மிக்க நேரத்தில், 21 வயது இளைஞர் ஒருவரின் பதிவு சமூக வலைதளங்களில் பரவி, ஆயிரக்கணக்கானவர்களின் மனதை உருக்கியுள்ளது.
ரெடிட்’ தளத்தில் பதிவு செய்த அந்த இளைஞர், தனக்கு பெருங்குடல் புற்றுநோய் 4-வது கட்டத்தில் இருப்பதாகவும், வரவிருக்கும் தீபாவளியே தனது கடைசி தீபாவளியாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“புற்றுநோய் வென்றுவிட்டது, நான் விடைபெறுகிறேன். 2023-ல் எனக்கு பெருங்குடல் புற்றுநோய் 4-வது கட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. பல சிகிச்சைகள் செய்தும் பலனின்றி, இனி முயற்சிக்க எதுவும் இல்லை என மருத்துவர்கள் கூறினர். இந்த ஆண்டின் இறுதிவரை நான் உயிருடன் இருக்க முடியாது என்று தெரிகிறது.
தீபாவளி வரவிருக்கிறது. தெருக்களில் விளக்குகள், சிரிப்புகள், தயாரிப்புகள்… இதையெல்லாம் பார்க்கும் இதுவே கடைசி முறை என்பதில் மனம் வலிக்கிறது. சில சமயம் இன்னும் எதிர்காலத்திற்காக திட்டமிடுகிறேன், ஆனால் பின்னர் எனக்கு அந்த ‘எதிர்காலம்’ இல்லை என்பதைக் நினைவுக்கு வரும்போது, எல்லாம் கலைந்து விடுகிறது.
நான் வீட்டிலிருக்கிறேன்; பெற்றோரின் முகத்தில் சோகம் தெரிகிறது. நான் ஏன் இதை பதிவிடுகிறேன் எனத் தெரியவில்லை… ஆனால் நான் மறைந்து போவதற்கு முன், என்னைப் பற்றி ஒரு சிறிய தடயமாவது இந்த உலகில் இருக்கட்டும் என்று நினைக்கிறேன். விடைபெறுகிறேன். இந்த உணர்ச்சி பூர்வமான பதிவை வாசித்த இணையவாசிகள் கண்கலங்கினர்.
அதில் பலர், “அற்புதம் என்று ஒன்று இருந்தால் அது உங்களுக்காக நிகழட்டும்”, “கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார், நாங்கள் உங்களுக்காக பிரார்த்திக்கிறோம்” என எழுதினர். சிலர், “இந்த பதிவால் வாழ்க்கையின் அர்த்தம் புதிதாக உணரப்படுகிறது. நாம் தினசரி எதிர்கொள்ளும் சிறு பிரச்சினைகள், இதை முன்னிட்டு எவ்வளவு அற்பமானவையாக தோன்றுகின்றன!” எனக் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அந்த 21 வயது வாலிபரின் பதிவு பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
