மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த 23 வயது மாணவியிடம் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஆண் நண்பருடன் இரவு உணவிற்குச் செல்ல முயன்ற போது, மருத்துவமனை வளாகத்துக்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் இளைஞர்கள் குழு ஒன்று வழிமறித்து மாணவியை இழுத்துச் சென்றது. பின்னர், வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கிய போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரை மற்றும் அவர்களுக்கு உதவிய ஒருவரை ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

இருப்பினும், இச்சம்பவத்தில் முக்கிய நபராக கருதப்படும் சஃபீக் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போலீசாருக்கு, சஃபீக்கின் சகோதரி ரோசீனா, தன்னுடைய சகோதரன் துர்காபூரில் பதுங்கியுள்ள தகவலை வழங்கினார்.

“என் தம்பி செய்த குற்றம் மன்னிக்க முடியாதது. அவன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே போலீசாருக்கு தகவல் கொடுத்தேன்,” என ஊடகங்களிடம் தெரிவித்த ரோசீனாவின் முடிவும் நெஞ்சைக் கிளுக்கவைத்தது.

தற்போது, கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் சம்பவ இடத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வன்கொடுமை சம்பவம் சமூகத்தை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.