கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் நேற்று நடைபெற்ற கவுன்சிலர் கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் ரங்கநாயகி தலைமையிலையும், துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், துடியலூரில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.3.27 கோடி மதிப்பில்மொத்தம் 102 தீர்மானங்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்ட்வின்ஸ் வரை 10.1 கி.மீ. நீளத்தில் ஜி.டி. நாயுடு பெயரில் உயர் மட்ட மேம்பாலம் கடந்த 9ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மேம்பாலத்தை திறந்துவைத்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் சிறப்பு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள், “இந்த பாலம் எங்கள் அ.தி.மு.க. ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. அதற்கான பெருமை எங்களுக்கே சேரும்,” என்று கோஷம் எழுப்பினர்.
“அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மேம்பாலப் பணி 5 முதல் 10 சதவீதம் மட்டுமே முடிந்தது. அதனை முடக்காமல், மீதமுள்ள 95 சதவீதப் பணியை முடித்து திறந்து வைத்தது தி.மு.க. அரசு தான்,”
என்று அவர்கள் கூறினர். இதனால் தி.மு.க.–அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி கோஷங்கள் எழுப்பியதால் கூட்டம் சில நேரம் பரபரப்பாகியது. மேலும் இதைத்தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
