பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரஷாந்த் கிஷோர் (பிகே) முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். வரும் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகத்திற்குஅளித்த நேர்காணலில் அவர் கூறியதாவது: “இந்த முடிவு கட்சியின் நிர்வாகக் குழுவால் எடுக்கப்பட்டது. அதற்குத் தலைவராக நான் இணங்கியுள்ளேன்.
ராகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவுக்கு எதிராக வேறு வேட்பாளரை அறிவித்துள்ளோம்.
நான் போட்டியிடுவது, கட்சியின் தேர்தல் மற்றும் அமைப்பு பணிகளில் கவனச்சிதறலை ஏற்படுத்தும் என்பதால், இந்த முடிவு சரியானது,” என்று தெரிவித்தார்.

அதன்பிறகு “ஜன் சுராஜ் கட்சி, பீகாரின் 243 தொகுதிகளில் சுமார் 150 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் 150 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை உள்ளது.
இந்த வெற்றியின் மூலம் நம் கட்சி தேசிய அளவில் செல்வாக்கு பெற்ற சக்தியாக மாறும்,”
என்று உறுதியுடன் தெரிவித்தார். தேர்தலில் “ஹாங்” நிலை ஏற்பட்டால் எந்த கூட்டணிக்கு ஆதரவு அளிப்பீர்கள் என்ற கேள்விக்கு, “அது சாத்தியமில்லை,” என்று சுருக்கமாக பதிலளித்தார். இதன் மூலம் JSP-இன் தனித்துப் போட்டி என்ற நிலைப்பாடு மேலும் வலுவடைந்துள்ளது.

தற்போதைய முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான JD(U) மீது பிகே கடுமையாக விமர்சித்தார்.  “NDA கூட்டணி இந்தத் தேர்தலில் தோல்வியடையும். JD(U) 25 தொகுதிகளுக்கும் மேல் வெல்ல முடியாது. நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக முடியாது. அதேசமயம், INDIA கூட்டணியும் பலவீனமானது – காங்கிரஸ் மற்றும் RJD இடையே உள்ள வேறுபாடுகள் இன்னும் நீங்கவில்லை,” என்று அவர் குற்றம்சாட்டினார்.

மேலும்  “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாஃபியா மற்றும் ஊழல் அரசியல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம். ஆட்சி அமைந்த 30 நாட்களுக்குள் குறைந்தது 100 அநீதி அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் உறுதியளித்தார்.

பிரஷாந்த் கிஷோர் உருவாக்கிய ஜன் சுராஜ் கட்சி, 2020 தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை அவர் தனிப்பட்ட முறையில் போட்டியிடாதிருந்தாலும், பிகேவின் தேர்தல் உத்திகள் NDA மற்றும் INDIA கூட்டணிகளுக்கு பெரிய சவாலாக அமையும் எனக் காணப்படுகிறது. மேலும் பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெறும், முடிவுகள் நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.