கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது தொடர்பாக, த.வெ.க கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கருத்து வெளியிட்டுள்ளார். அவர்  கூறியதாவது:

“நாங்கள் தொடக்கத்திலிருந்தே பாரபட்சமற்ற விசாரணையையே கேட்டோம். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஆனால், மற்ற மனுதாரர்கள் சி.பி.ஐ. விசாரணை கோரியிருந்தார்கள். தற்போது உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, அதனை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இது முழுமையான மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும், நாங்கள் திருப்தி அடைகிறோம். நீதி வெல்லும்’ என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: “உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிலரின் மீது சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர்கள் மனு தாக்கல் செய்தது அவர்களுக்குத் தெரியாது எனச் சொல்லப்படுகின்றது. அப்படியானால், யார் தூண்டுதலின் பேரில், எந்த நோக்கத்துடன் மனு தாக்கப்பட்டது என்பதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். இதைப்பற்றி எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

நடிகர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பதையே முதலில் விரும்பினார். இதற்கிடையில் அவர், வீடியோ கால் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் பேசினார். இந்த வாரம் விஜய் கரூருக்கு நேரில் சென்று மக்களை சந்திக்கிறார்.
அதற்கான இடம் மற்றும் நேரம் குறித்து கரூர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் பிற அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். மேலும் நடிகர் விஜயின் பிரச்சார வாகனத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை கண்டிப்பாக நாங்கள் ஒப்படைப்போம் என்றும் புஸ்ஸி ஆனந்த் வருகிறார் என்றும் கூறினார்.