திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் உடல்நிலை குறித்து பரவிய தகவல்களுக்கு விளக்கம் அளித்தார். “ராமதாஸ் அவர்கள் தற்போது ஐசியுவில் அனுமதிக்கப்படவில்லை. இதய பரிசோதனை செய்யும் போது கூட அவருக்கு மயக்க மருந்து செலுத்தவில்லை. அவர் தமது இதய துடிப்பை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கண்காணித்து வந்தார்” என அவர் தெளிவுபடுத்தினார்.

” ராமதாஸ் ஒரு தேசிய அளவிலான சமூக நீதித் தோழர் என்பதால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பல மாநில தலைவர்களும், தேசிய அரசியல் தலைவர்களும் நலம் விசாரித்தனர். சிலர் நேரில் வந்து பார்த்தனர், சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். இது அவர்களது மரியாதை, அன்பு. எவரையும் மருத்துவமனைக்கு வந்து பார்க்குமாறு அழைக்கவே இல்லை” என்றார்.

“அன்புமணி கூறுவது போல அபாண்டமான பொய் எதுவும் இல்லை. இது தேவையற்ற மற்றும் உண்மைக்கு புறம்பான வாக்கியமென்று தான் கருதுகிறேன்” என தெளிவாக பதிலடி கொடுத்தார் ஜி.கே.மணி. பாமக உள்ளே மீண்டும் கருத்து வேறுபாடுகள் வெடிக்கின்றனவா என்ற சந்தேகம் தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.