பூனேயில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர், சக ஊழியர்களின் கடுமையான மன உளைச்சல் மற்றும் மிரட்டல்கள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உயிரிழப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், அலுவலகத்தில் தான் தினமும் அனுபவித்த அவமானங்களையும், தனது தொழில் வாழ்க்கையை நாசமாக்கிவிடுவதாக சக ஊழியர்கள் விடுத்த மிரட்டல்களையும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்தத் துயரமான சம்பவம், நிறுவனங்களில் நிலவும் பணிச்சூழல் மற்றும் ஊழியர்களின் மனநலம் குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் சக ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திறமை வாய்ந்த ஊழியர்கள் பணி அழுத்தத்தைத் தாண்டி, சக ஊழியர்களின் இத்தகைய அத்துமீறிய நடத்தைகளால் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலம் தொடர்வது ஐடி துறையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதும், இதுபோன்ற புகார்கள் மீது நிறுவனங்கள் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதும் அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
