மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டம் சதரியா கிராமத்தில் சமூகச் சிக்கல் தொடர்பான அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
அங்கு வசித்து வந்த புர்ஷோத்தம் குஷ்வாஹா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர், அன்னு பாண்டே என்ற பிராமண இளைஞரின் கால்களைக் கழுவி, அந்த நீரை குடிக்க கிராம மக்கள் முன்னிலையில் கட்டாயப்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த கிராமத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும், அன்னு பாண்டே தொடர்ந்து மது விற்றதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து, கிராமக் கூட்டத்தில் அவருக்கு ரூ.2,100 அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, புர்ஷோத்தம் குஷ்வாஹா, அன்னு பாண்டே செருப்பு மாலை அணிந்திருப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) படத்தை உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்தப் பதிவை நீக்கி மன்னிப்பு கேட்டாலும், இது பிராமண சமூகத்தினருக்கு அவமானம் செய்ததாக சிலர் கருதினர்.
#Casteism The terror of casteist Manuvadi mindset is rising. In Damoh district, Madhya Pradesh, a young OBC man was forced by Brahmins to wash their feet and drink that water. These so-called “civilized” people still see SC, ST, and OBCs as “Shudras” and “untouchables.”… pic.twitter.com/OulZCYEicS
— Anindya Das 🇮🇳 (@AnindyaDas1) October 12, 2025
இதையடுத்து, பிராமண சமூகத்தைச் சேர்ந்தோர் கூடி, புர்ஷோத்தம் தனது செயலுக்காக தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கோரினர். அதன்பேரில், அவர் அன்னு பாண்டேயின் கால்களை கழுவி அந்த நீரை அருந்தவும், மேலும் ரூ.5,100 அபராதம் செலுத்தி மன்னிப்பு கோரவும் கட்டாயப்படுத்தப்பட்டார்.
சம்பவத்துக்கான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், புர்ஷோத்தம் தரையில் முழங்காலிட்டு அன்னுவின் கால்களை கழுவும் காட்சி பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, புர்ஷோத்தம் அன்னு பாண்டே தனது “குரு” போன்றவர் என்றும், அந்தக் காணொளியை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஒருவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
