தெலுங்கானா மாநிலம் எல்கதுர்த்தி அருகே கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த கிருபாகர் என்பவரின் மகள் கீர்த்தனா (19). இவர் ஐதராபாத்திலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த கீர்த்தனாவுக்கு, வகுப்புகளில் நடத்தப்படும் பாடங்கள் சரியாக புரியவில்லை எனத் தினமும் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டு வருத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பெற்றோர் அவரை விடுமுறையில் வீட்டிற்கு வரவழைத்து, வேறு கல்லூரியில் சேர்க்க முயற்சி செய்து வந்தனர். வீட்டிற்கு வந்த பின்னரும் கீர்த்தனா தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தன் அறைக்குள் சென்ற கீர்த்தனா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
