ஆண்களுக்கு நிகராக பல துறைகளிலும் பெண்கள் முன்னேறி வரும் நிலையில், அவர்களுக்கான பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, பெண்கள் பணியாற்றுவதற்கு பாதுகாப்பான மற்றும் விரும்பத்தக்க இந்திய மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகளாவிய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு தீர்வுகளை வழங்கும் வீல்பாக்ஸ் (Wheebox) என்ற அமைப்பு வெளியிட்ட “இந்தியா ஸ்கில்ஸ் 2025” (India Skills 2025) என்ற ஆண்டறிக்கையில், பெண்களுக்கு பாதுகாப்பான பணியிட வாய்ப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களின் தரவரிசை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆந்திரப் பிரதேசம் முதல் இடத்தையும், கேரளா இரண்டாம் இடத்தையும், குஜராத் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. தமிழகம் இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பெற்றுள்ளது. அதன்பின் மகாராஷ்ட்டிரா, டெல்லி, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பெண்கள் பணியிடங்களை தேர்ந்தெடுக்கும்போது பாதுகாப்பு, வாழ்வதற்கேற்ற அடிப்படை வசதிகள், சுகாதார சேவைகள், கல்வி மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்பு போன்ற அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். பெண்கள் வேலைவாய்ப்பை ஒரு தொழில் வாய்ப்பாக மட்டும் அல்லாமல், கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தின் பிரதிபலிப்பாகவும் காண்கிறார்கள்.
மேலும், பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற சூழல் மற்றும் ஆதரவான பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ள மாநிலங்களில் பெண்கள் தொழில்முனைப்பு மற்றும் வளர்ச்சியில் அதிகமாக பங்கேற்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் இத்தரவை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடங்களை உருவாக்குவது, ஆள்தேர்வு மற்றும் மனிதவளக் கொள்கைகளை வகுப்பதில் வழிகாட்டியாக அமையும் எனவும் அறிக்கை பரிந்துரைக்கிறது.
