சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ச்சிப் பணிகளை வேகமாக முன்னெடுப்பதாகப் பாராட்டினார்.
ஆனால், காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில்கள் தொடங்குவதற்கான அனுமதிகளில் தாமதம் ஏற்படுவதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகங்கள் கோப்புகளுக்கு உடனடி ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது கூட்டத்தில் த.வெ.க. கொடியுடன் சிலர் கலந்துகொண்டதாகவும், இதனால் அ.தி.மு.க.-த.வெ.க. கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதாகவும் கூறியதை செல்வப்பெருந்தகை குறிப்பிட்டார்.
ஆனால், இதனை “பகல் கனவு” என்று கடுமையாக விமர்சித்த அவர், காங்கிரஸ் கூட்டங்களிலும் த.வெ.க. கொடி பறப்பதாகவும், அதற்காக காங்கிரஸ் கூட்டணி கனவு காண முடியாது என்றும் தெரிவித்தார். அ.தி.மு.க.-த.வெ.க. கூட்டணி என்பது நடக்காத கற்பனையே என்று அவர் உறுதியாகக் கூறினார்.
