ராமேசுவரம் அருகே பாம்பன் கடலின் மீது அமைந்துள்ள ரோடு மற்றும் ரெயில் பாலங்கள் சுற்றுலா பயணிகளால் எப்போதும் களைகட்டும். பெரும்பாலும், பாலத்தின் மீது வாகனங்களை நிறுத்தி, கடலின் காட்சியை ரசிப்பது வழக்கம். இந்நிலையில், பாம்பன் ரோடு பாலத்தின் நடுப்பகுதியில் தடுப்புச்சுவரின் மீது நின்று, ஒருவர் திடீரென கடலுக்குள் குதிக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவை, பாம்பனை கடந்த ரெயிலில் பயணித்த ஒருவர் இயற்கை காட்சி கையாள தனது செல்போனில் படம் பிடித்தபோது, அந்த நபர் கடலுக்குள் குதிக்கும் அதிர்ச்சி தரமான காட்சியும் பதிவாகியுள்ளது. வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டதும், குறுகிய நேரத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அந்த நபர் தற்கொலைக்கு முயன்றாரா, அல்லது வேறு காரணமா என கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
கடலில் குதித்த நபர் யார்? அவர் உயிருடன் மீட்கப்பட்டாரா? என்பதில் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. சம்பவம் தொடர்பாக தகவல்கள் சேகரித்து வரும் போலீசார், அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பயணிகள் வீடியோக்களை ஆய்வு செய்து வருகின்றனர். தற்கொலை முயற்சி, சாகச வீடியோ முயற்சி அல்லது வேறு காரணம் என விசாரணை பல கோணங்களில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த மர்ம நபர் தொடர்பான விசாரணை ராமேசுவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
