ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில், 19 வயது இளைஞன் ஹரிஷ், தனது இன்டர்மீடியட் தேர்வில் தேர்ச்சி பெற்றதால், புதிய மோட்டார் பைக் வாங்க வேண்டும் என்று தன் பெற்றோரிடம் வற்புறுத்தினார். அவன் ஒரே மகனாக இருந்ததால், நண்பர்களுக்கு பைக் இருப்பதாகவும், தனக்கும் வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அவனது தந்தை ஸ்ரீநிவாஸ், ஆட்டோ ஓட்டுபவர், 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, ஹரிஷுக்கு பைக் வாங்கிக் கொடுத்தார். ஹரிஷ் மகிழ்ச்சியாக நண்பர்களுடன் பைக் ஓட்டி காட்டினார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, காலையில் ஹரிஷ் தன் நண்பருடன் துவாரகாநகர் வழியாக வீட்டுக்கு பைக் ஓட்டி வந்தார். அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது. இதில் ஹரிஷுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் சிகிச்சையின்போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குடும்பத்தின் ஒரே மகனை இழந்து ஸ்ரீநிவாஸும் அவர் மனைவியும் மிகுந்த துயரத்தில் உள்ளனர். “ பைக் வாங்க அவனுக்கு இன்னும் கொஞ்சம் வயசாகட்டும் என்று சொன்னோம், ஆனால் மிரட்டியதால் வாங்கிக் கொடுத்தோம்” என்று ஸ்ரீநிவாஸ் கண்ணீருடன் கூறினார். இது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.