கர்நாடகாவின் துமகூர் மாவட்டம் ஜெயநகரில் உள்ள ஒரு குடும்பத் தகராறு, சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தில் வேலை பார்த்து இந்தியாவுக்கு திரும்பிய சல்மான் பாஷா என்பவர், தனது மனைவி நிகாத் மற்றும் அவருடைய உறவினர்கள் தமக்கு மன அழுத்தம் மற்றும் நிதி சிக்கல்களை ஏற்படுத்தியதாக கூறி, ஃபேஸ்புக் லைவ் வீடியோ ஒன்றில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், AIMIM கட்சியின் துமகூர் மாவட்டத் தலைவர் சயத் புர்ஹான் உடீனுடன் மனைவிக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். லைவ் வீடியோவில், “எனது மனைவியின் குடும்பம் என்னை தவறான வழியில் மிரட்டி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். என் குழந்தைகளை பார்க்க விடவில்லை; AIMIM தலைவர் புர்ஹான் உடீனுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது” என சல்மான் கூறியுள்ளார்.
மேலும், பெண்கள் போலீஸ் நிலையம் அவருக்கு எதிராக வேலை செய்து, தவறான வழக்கில் கைது செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். லைவ் முடிந்ததும் தற்கொலை முயற்சி செய்த அவரை பொதுமக்கள் மீட்டு, மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்போது சல்மானின் குடும்பம், மாவட்ட எஸ்பியிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளித்த நிகாத், “இது சல்மானின் பழைய நாடகங்கள். ஏற்கனவே சோப்பு தண்ணீர் குடிப்பது போல் நடித்து, என் வேலை இடத்தில் ஆசிட் வீசுவேன் என மிரட்டியிருக்கிறார். இது போன்ற பல முறை புகார்கள் நான் போலீசில் அளித்துள்ளேன். இப்போது இந்த நாடகம்தான் மக்கள் கனிவைப் பெற முயற்சி செய்யும் ஓர் நாடகம்” என்று விளக்கம் அளித்துள்ளார். போலீசார் தற்போது இருபுறத்தவர்களிடமிருந்து விளக்கங்கள் பெற்று விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
