அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள சவுத்வெஸ்டர்ன் மிடில் ஸ்கூலில் பயிலும் 13 வயது மாணவர் ஒருவர், வகுப்பறையில் பயன்படுத்திய பள்ளி கணினியில் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு கருவியிடம், “வகுப்பின் நடுவில் என் நண்பரைக் கொல்வது எப்படி?” என்று மிகவும் அதிர்ச்சியளிக்கும் கேள்வியைக் கேட்டதால் கைது செய்யப்பட்டார். இந்தக் கேள்வியை பள்ளியின் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு உடனடியாக கண்டறிந்து, பள்ளி நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் எச்சரிக்கை அனுப்பியது. இதையடுத்து, போலீசார் பள்ளிக்கு விரைந்து மாணவரை காவலில் எடுத்து விசாரித்தனர்.

விசாரணையில், மாணவர் தான் இதை வெறும் “வேடிக்கைக்காக” செய்ததாகவும், தன்னை எரிச்சலூட்டிய ஒரு வகுப்புத் தோழனை “கிண்டல்” செய்யவே இப்படி கேட்டதாகவும் கூறினார். இருப்பினும், இந்தக் கேள்வியின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. எனவே மாணவர் கைது செய்யப்பட்டு, உள்ளூர் சிறார் காவல் மையத்தில் அடைக்கப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் வெளியிடப்படத நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.