கரூர் துயர சம்பவத்துக்குப் பின் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சிக்காக லயோலா மணி, பிரசாந்த் ரங்கசாமி உள்ளிட்ட சிலர் மட்டுமே தொடர்ந்து சமூக வலைதளங்களில் எதிர்த்தரப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கட்சிக்கு ஆதரவாக போராடி வருகின்றனர். இந்த நிலையில், வெற்றிக் கழக ஆதரவாளர் ஒருவர் “நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள், உங்களை டார்கெட் பண்ணுகிறாங்க, அப்புறம் நீங்களும் ஜெயில் பறவை தான்” என எச்சரிக்கையாக பதிவு செய்திருந்தார். இதன் பின்னர், இரண்டு நாட்களுக்கு முன்வரை கட்சிக்காக முழுமையாக போராடிய பிரசாந்த் ரங்கசாமி, தற்போது திடீரென கட்சியை எதிர்த்து பேசும் விதமாக பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தன் சமூக வலைதளத்தில், “நான் என்ன புஸ்ஸி ஆனந்தா? பயந்து ஓடி ஒளிய? கைது நடந்தா அதை எதிர்கொண்டு தான் ஆகணும். தமிழனா பிறந்திருக்கிட்டு இந்த தைரியம் கூட இல்லேன்னா எப்படி வாழுறது?” என பதிவிட்டுள்ளார். இவரது இந்த கூர்மையான கருத்து அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சிலர் இதை தைரியமான வெளிப்பாடு என பாராட்டினாலும், மற்றவர்கள் “இரட்டை மனநிலை ஏன் ?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.