திருச்சி அரியமங்கலம் பகுதியில், 3 வயது பெண் குழந்தையை தந்தை, ரூ.50 ஆயிரம் தொகைக்காக விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியமங்கலத்தைச் சேர்ந்த ரவிக்குமாருக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர் வேலையில்லாமல் மது பழக்கத்துக்கு ஆளானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி, கட்டிட சித்தாள் வேலை செய்து வந்தார். மது அருந்தும் பழக்கம் காரணமாக, தம்பதியர் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி, மனைவியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, ரவிக்குமார் தனது 3 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், குழந்தையை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வராததால் சந்தேகமடைந்த மனைவி, அவரிடம் விசாரித்தபோது, குழந்தை நண்பர் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மனைவி அப்பகுதியைச் சேர்ந்த பூக்கடை உரிமையாளர் சாகுலிடம் சென்று விசாரித்த போது, அவர், “உங்களது நடத்தை மீது சந்தேகம் உள்ளது, அதனால் உங்கள் கணவர் குழந்தையை வேறொருவருக்கு தத்துக்கொடுக்கச் சொன்னார்; அதன்படி குழந்தையை கொடுத்துவிட்டேன்” என கூறியுள்ளார்.
இது பற்றி அரியமங்கலம் போலீசில் மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், திருச்சி பாலக்கரையை சேர்ந்த முருகன் – சண்முகவள்ளி தம்பதியினர், குழந்தையில்லாததால், தத்தெடுக்க விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து, ரவிக்குமாரின் 3 வயது பெண் குழந்தையை சாகுல், ரூ.50,000க்கு அந்த தம்பதியினரிடம் தத்துக்கொடுத்தது தெரியவந்தது. இதில், ரூ.15,000 ரவிக்குமாருக்கு வழங்கப்பட்டதாக சாகுல் கூறினார். ஆனால், ரவிக்குமார், பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றும், அதற்குபதில் சாகுல் தினமும் மது குடிக்க அவருக்கு பணம் கொடுத்துள்ளார்.
மேலும் முருகன் தம்பதியினர், குழந்தையை நன்கு பராமரித்து வளர்த்துவந்தது விசாரணையில் தெரியவந்தது. ஆனால், சட்டப்படி விதிமுறைகளை மீறி தத்துக்கொடுக்கப்பட்டிருந்ததால், போலீசார் குழந்தையை மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, பூக்கடை உரிமையாளர் சாகுல், ரவிக்குமார் மற்றும் முருகன் – சண்முகவள்ளி தம்பதியரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது குழந்தைகள் உரிமைகள் மீறல் மற்றும் சட்டவிரோத தத்துக்கொடுக்கல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.
