பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி, தனது வீட்டிற்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ1 குற்றவாளியாக நாகேந்திரன், பொன்னை பாலு உள்ளிட்ட மொத்தம் 27 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில், மேலும் இருவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதால், அவர்களை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து வந்த செம்பியம் போலீசார், வழக்கின் குற்றப்பத்திரிகையை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தற்போது இந்த வழக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், வழக்கின் முக்கியத்துவத்தையும், அதன் பரவலான தாக்கத்தையும் கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை மத்தியப் புலனாய்வு இயக்கத்திற்கு (CBI) மாற்றி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி மற்றும் ஆயுள் தண்டனை கைதியான நாகேந்திரன், தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். மேலும்
கல்லீரல் பாதிப்பு காரணமாக அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால், மருத்துவமனையில் அவசரமாக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.