தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்வளையம் அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
விஜய் பரப்புரையின் போது மின் தடையை ஏற்படுத்தியது யார்? கூட்டத்தின் நடுவே செருப்பு வீசப்பட்டது எப்படி? அந்த நேரத்தில் காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது? மக்கள் அதிக அளவில் கூடும் என்பதை அறிந்தபோதும் மாவட்ட நிர்வாகம் ஏன் அனுமதி வழங்க மறுத்தது? பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கான காரணம் என்ன? கூட்டம் தொடங்குவதற்கு முன்பே ஆம்புலன்ஸ்கள் வருவது வழக்கமல்ல. இதற்குப் பின்னால் என்ன உள்ளது?” என அவர் சாடினார்.
மேலும், முதலமைச்சர் வரும்போது மட்டுமே, பெரிய இடங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் மற்ற கட்சிகளுக்கான கூட்டங்களுக்கு ஏன் குறைந்த வசதிகள்?” எனக் கேட்டார். “தனிநபர் விசாரணை ஆணையம் செயல்பட்டு வரும் நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக கருத்து தெரிவித்தால், அது விசாரணையை பாதிக்கக்கூடியதாகும்” என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு அவர் பேசும்போது, “திமுக ஆட்சி வந்ததிலிருந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. திருவண்ணாமலையில் ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண், இரு காவலர்களால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதற்கான சாட்சி. இதனால்தான் தமிழக காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகிறது” எனக் குற்றம்சாட்டினார்.
மேலும்”விஜய் தொடர்ந்து பாஜகவை கொள்கை எதிரியாக கூறுகிறார். ஆனால் அவர் பாஜக பக்கம் இருந்தால் எப்படி அவரை கொள்கை எதிரி எனச் சொல்ல முடியும்? இது ஒரு பெரும் முரண்பாடே” என்றார்.
