நடிகர் ரஜினிகாந்துக்கு பதவி மீதும் அதிகாரத்தின் மீதும் வேட்கையோ, வெறியோ இல்லாததால் அரசியலிலிருந்து ஒதுங்கியுள்ளார். ஆனால் விஜய்க்கு முதல்வர் பதவி மீது மோகம் அதிகம். அதனால்தான் திமுகவை குறிவைத்து அரசியல் நடத்துகிறார்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பாஜகவின் நிர்வாகிகள் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், விஜய்க்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் கரூரில் ஆய்வு செய்துவர, த.வெ.க. முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில், திருமாவளவன் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், “கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து விஜய்க்கு உண்மையான வருத்தம் இருப்பதுபோல் தெரியவில்லை. ஹஸ்கி (மெதுவான) குரலில் பேசினால் சோகமாக இருக்கும் என நினைத்துக் கொண்டு பேசுகிறார் போலிருக்கும். அவரது முகத்தில் சோக நிழலே இல்லை. இந்தச் சூழலை அரசியல் ஆதாயமாக பயன்படுத்த முயற்சிக்கிறார்,” என்றார். அவர் மேலும் கூறியதாவது:

“சம்பவம் நடந்தவுடன் அங்கு வர இயலவில்லை என்றால், அது மனித இயல்பே. அதற்காக அவர் மன்னிப்புக் கேட்கலாம். அடுத்த நாள் அவரது அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கலாம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கலாம். ஆனால், மூன்று நாட்களுக்குப் பிறகே, பாஜக–ஆர்எஸ்எஸ் தரப்பினர் கூறிய பிறகுதான் வீடியோவொன்று வெளியிடுகிறார். இது அவரது உண்மையான சிந்தனையை வெளிக்கொண்டு வருகிறது.”

“விஜய், திமுகவின்மீது வெறுப்பை மட்டும் வைத்து அரசியல் நடத்துகிறார். இது ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் பின்னணி வேலைப்பாடாக இருக்கலாம். நடிகர் ரஜினி மீது அவர்கள் அழுத்தம் கொடுத்தபோதும், அவர் அரசியலில் இறங்காமல், பதவிக்காக வெறி இல்லாததால் எச்சரிக்கையாக ஒதுங்கினார். ஆனால் விஜய்க்கு முதல்வர் நாற்காலி மீது மோகம் உள்ளது,” என அவர் தெரிவித்தார்.

“கரூர் கூட்டத்தில் இருந்தவர்கள் த.வெ.க தொண்டர்களே. அவர்கள் 7 மணி நேரம் காத்திருந்தனர். வன்முறை எதுவும் இல்லாமல், ஒருவரின் மீது ஒருவர் மிதித்ததால் இந்தப் பேரழிவு ஏற்பட்டது. இதைத் தவறாக சித்தரித்து, ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உண்மையான வருத்தம் தெரிவிக்கவில்லை,” என்றும் விமர்சித்தார்.