கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பல உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. இந்த சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 59 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிகழ்வு தொடர்பாக அரசு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த கூட்ட நெரிசலுக்குப் பொறுப்பாளியாக தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில், ‘தமிழ்நாடு மாணவர் சங்கம்’ என்ற பெயரில் கரூர் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பரபரப்பை ஏற்படுத்திய அந்த சுவரொட்டியில், தவெக தலைவர் விஜய் கைகளை உயர்த்திய நிலையில், அவரது கைகளில் இருந்து ரத்தம் சிந்துவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அதில்,

“தமிழக அரசே, அப்பாவி உயிர்களை பலி வாங்கி தப்பியோடிய விஜய் எனும் அரசியல் தற்குறியை, கொலைக் குற்றவாளியாக கைது செய் – தமிழ்நாடு மாணவர் சங்கம்” என எழுதப்பட்டுள்ளது.

இந்த சுவரொட்டிகள் நகர் முழுவதும்  காணப்படுவதுடன், அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. மேலும் இது தொடர்பாக, போலீசார் தற்போது சுவரொட்டி ஒட்டியவர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.