திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தச்சூர் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையில், சமீபத்தில் நடந்த திருட்டு முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தனர். ஆனால் நள்ளிரவில், ஒரு மர்ம நபர் கட்டிங் மெஷின் மற்றும் கரண்ட் கம்பி ஆகியவற்றுடன் டாஸ்மாக் ஷட்டரில் சிறிய பெட்டி அளவிலான ஓர் சைஸில் கட்டிங் செய்ய தொடங்கினார்.
திருவள்ளூர்: அரசு மதுபானக் கடையில் வெல்டிங் வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசார் கொத்தாக கைது செய்தனர்.#Tiruvallur #Government #Tasmac #Theft pic.twitter.com/0BlUULAFee
— PttvOnlinenews (@PttvNewsX) September 29, 2025
ஒவ்வொரு 10 வினாடிக்கும் சுற்று பார்த்து நிதானமாக வேலையை செய்த அந்த நபர், சிசிடிவி கண்காணிப்பில் சிக்கிவிட்டார். டாஸ்மாக் ஊழியர் சிவக்குமார் வீட்டில் இருந்தபடியே அலர்ட் சிஸ்டம் மூலம் தகவல் பெற்றதும், உடனே CCTV-யை பிளே செய்து திருடனின் செயலை உறுதி செய்தார். இதையடுத்து உடனே, அவர் கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
போலீசாரின் ரோந்து வாகனம் அப்பகுதிக்கு விரைந்து வந்த நிலையில், அதன் வெளிச்சத்தை பார்த்த திருடன், தனது செயலை மறைக்க ஷட்டரில் செய்த ஓட்டையில் அட்டையை வைத்து மறைத்து அங்கிருந்து நடக்க முயன்றார்.
அப்போது தான் போலீசார் அவரை நிறுத்தி விசாரித்தனர். பதட்டமடைந்த அந்த நபர், வினோத் (வயது 30) என அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரணையில், இவர் பல டாஸ்மாக் கடைகளில் ஷட்டரை உடைத்து, சுவரில் துளை போட்டு திருட்டு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
ஊழியரின் சாமர்த்தியத்தால் இந்த மெகா கொள்ளை முயற்சி தவிர்க்கப்பட்டுள்ளதுடன், வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தச்சூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
