கரூர் மாவட்டத்தில் உள்ள வேலுசாமிபுரம் பகுதியில், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் நடிகர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சோக சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நடிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். விஜய் தனது கட்சியின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல நடிகை ஓவியா, இந்தச் சம்பவத்திற்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி, அவரை கைது செய்ய வேண்டும் என்று ‘அரெஸ்ட் விஜய்’ என்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தின் அனுமதி 10,000 பேருக்கு இருந்தபோதிலும், 50,000-க்கும் மேற்பட்டோர் கூடியதால் நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். TVK-ன் உயர்மட்ட தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
