லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கும் கோரிக்கையுடன், இந்திய அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் லடாக்கை இணைக்க வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க ‘லே அபெக்ஸ் பாடி’ அமைப்பின் இளைஞர்கள் முழு அடைப்பு போராட்டம் அறிவித்திருந்தனர். ஆனால், அந்தப் போராட்டம் வன்முறையாக மாறியதில், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்ததுடன், 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைத்ததுடன், லேவில் உள்ள பாஜக அலுவலகத்தையும் தாக்கினர்.

இந்த சூழ்நிலைக்கு சோனம் வாங்சுக்கின் வாக்குமூலங்களே காரணம் எனக் கூறி, மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இதற்கு பதிலளித்த வாங்சுக் கூறியதாவது:  “என்னை வன்முறைக்கு காரணமானவனாக சித்திக்கபடுத்துவதன் மூலம் மத்திய அரசு என்னை பலிகடா ஆக்க முயல்கிறது. என் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு சிறைவாசம் விதிக்க திட்டமிட்டுள்ளனர். எனது கைது அரசுக்கு தீர்வை விட, புதிய பிரச்சினைகளையே உருவாக்கும். இளைஞர்கள் ஏற்கெனவே விரக்தியில் உள்ள நிலையில், பழிபோடும் அரசியலை விடுத்து, காரணத்தை ஆராய்ந்து தீர்வுகளுக்கு செல்ல வேண்டும்.”

இந்நிலையில், SECMOL என்ற தனது அரசு சாரா நிறுவனத்தின் FCRA (வெளிநாட்டு நிதி அனுமதி) உரிமையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் லடாக்கில் நிலவும் நீண்டகால அரசியல் குறைபாடுகளும், சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறைகளும், இளைஞர்களின் எதிர்ப்பும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சோனம் வாங்சுக்கின் கைது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.