நேபாளத்தில் அரசு ஊழலுக்கு எதிராக இளைஞர்கள் தலைமையிலான ‘ஜெனரேஷன் இசட்’ (Gen Z) குழு திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டது. தலைநகர் காட்மாண்டுவில் தொடங்கிய இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால், பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை சூறையாடியதுடன், நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைப்பது போன்ற வன்முறைகளும் நடைபெற்றன. இதனையடுத்து நிலைமை மேலும் மோசமாவதைத் தடுக்கும் விதமாக, பிரதமர் ஒலி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவுக்குப் பின்னர் அமைதியான நிலை உருவாகியது.
இந்த நிலையில், நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சுஷிலா கார்கி, நாட்டின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். பதவியேற்ற பிறகு முதல்முறையாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், “அடுத்த ஆண்டு மார்ச் 5ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்” என தெரிவித்தார்.
மேலும், தேர்தலில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்க, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் தகுதியான குறைந்தபட்ச வயது 18லிருந்து 16 ஆக குறைக்கப்படுவதாகவும், அதற்கான சட்டத்திருத்தத்துக்கு நேபாள அதிபர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்றார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, “நாட்டில் உள்ள இளைய தலைமுறையின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், தற்போது 16 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஆனால், வாக்கு செலுத்தும் உரிமை 18 வயதுக்கு பிறகே அமையும். வெளிநாட்டில் இருந்து மீண்டும் நாட்டுக்குத் திரும்பியவர்களும் தங்களுடைய வாக்குரிமையை பயன்படுத்த வாய்ப்பு பெறுவர். எதிர்வரும் தேர்தல் சுதந்திரமானதும் நியாயமானதும் ஆக நடைபெறும் என்பதை உறுதி செய்கிறேன்,” என்றார் கார்கி.
மேலும் நேபாள அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான திருப்பமாகவும், இளைய தலைமுறைக்கு நேரடியான பங்கு வழங்கும் புதிய அத்தியாயமாகவும் பார்க்கப்படுகிறது.
