கள்ளக்குறிச்சி மாவட்டம்  கல்வராயன் மலைப் பகுதியில் கோழி வேட்டைக்கு முயன்ற போது துப்பாக்கி குண்டு தவறி சென்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியலூர் அருகே உள்ள மேல்மதூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இன்று தனது மருமகனுக்காக கோழி அடித்து குழம்பு வைக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து, வீட்டின் அருகே சுற்றித் திரிந்த கோழியை சுட முயன்றார். அப்போது குறி தவறிய துப்பாக்கி குண்டு, பக்கத்து வீட்டில் படுத்திருந்த பிரகாஷ் என்ற இளைஞரின் தலையில் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அண்ணாமலையை கைது செய்து, அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.