2007 ஆம் ஆண்டு நடந்த முதல் T-20 உலகக் கோப்பை இந்தியாவுக்கு மறக்க முடியாத ஒரு தருணம். அந்தத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் வீழ்த்தி முதல் T-20 கோப்பையை வென்றது. இந்தத் தொடரில் மற்றொரு மறக்க முடியாத நிகழ்வு, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் ஒரு ஓவரில் ஆறு பந்துகளிலும் ஆறு சிக்ஸர்கள் அடித்து உலக அளவில் புகழ் பெற்றார். அவரது இந்தச் சாதனை இன்றும் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையிலும் யுவராஜ் சிங் தனது திறமையை வெளிப்படுத்தினார். அந்தத் தொடரில் அவர் “பிளேயர் ஆஃப் தி டோர்னமென்ட்” விருதை வென்றார். கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமல்லாமல், புதிய திறமைகளை வளர்க்கும் பணியிலும் யுவராஜ் ஈடுபட்டார். இதற்காக அவர் இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் யுவராஜ் சிங் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (YSCE) என்ற கிரிக்கெட் அகாடமிகளைத் தொடங்கினார். இந்த அகாடமிகள் இளம் வீரர்களுக்கு கிரிக்கெட்டின் அடிப்படைகளை கற்றுத் தருவதோடு, அவர்களது கனவுகளுக்கு புதிய பாதைகளையும் திறக்கின்றன.
யுவராஜின் அகாடமிகள் கிரேட்டர் நொய்டா, பைசாபாத் (அயோத்தி), பல்வால் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன. இவை குறிப்பாக சிறு நகரங்களைச் சேர்ந்த குழந்தைகளின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணருவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. 5 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த அகாடமிகள் பயிற்சி அளிக்க ஏற்றவையாகக் கருதப்படுகின்றன. இந்த அகாடமிகளின் மூலம் யுவராஜ், இளம் வீரர் அபிஷேக் ஷர்மாவை வழிநடத்தி, அவரை T-20 கிரிக்கெட்டில் ஒரு பிரகாசமான நட்சத்திரமாக உருவாக்கியுள்ளார். யுவராஜின் அனுபவமும், ஒழுக்கமான வழிகாட்டுதலும் அபிஷேக் ஷர்மாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
