புதுக்கோட்டை மாநகரில் நண்பனிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் மோதிய ஒருவர், மதுபோதையில் தன்னுடைய நண்பரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுக்கோட்டை எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் நித்தியராஜ் (40). இவரது தந்தை நடத்தி வந்த லாரி புக்கிங் அலுவலகத்தை, நித்தியராஜ் சமீப காலமாக கவனித்து வந்த நிலையில் கடந்த ஒரு வருஷமாக அவர் எந்தவொரு தொழிலுக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
சின்னப்பா நகரை சேர்ந்தவர் சரவணன் (47). இவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நித்தியராஜ், சரவணன் இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. இந்தநிலையில், சரவணனிடம் நித்தியராஜ் ரூ.22,000 பெற்றிருந்தார். ஆனால் அந்தத் தொகையை திருப்பிக்கொடிக்காமல் இழுத்து வந்ததாகவும், இதற்காக இருவருக்கும் இடையில் முரண்பாடு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று (22-ம் தேதி) மதியம், இருவரும் புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் அருகே ஒரு பாரில் மது அருந்திக் கொண்டிருந்த போது, பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன், தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் நித்தியராஜின் மார்புப் பகுதியை குத்தினார். இதனால் அதிக ரத்தப்போக்குடன் நித்தியராஜ் விழுந்தார். தகவல் கிடைத்ததும், டவுன் போலீசார் விரைந்து வந்து நித்தியராஜை மீட்டு, உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நித்தியராஜை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் மருந்தக ஊழியர் சரவணனை போலீசார் கைது செய்து, டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
