பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சட்டசபை தொகுதி வாரியாக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மழையின் காரணமாக நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளில் தனது தேர்தல் பிரசாரத்தை வேறு தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்தார்.

இந்நேரத்தில், சேலம் மாவட்டம் ஓமலூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை தொடங்கிவைக்க பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, அவர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றார். அவருடன் தமிழக பா.ஜ.க. மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் ஆகியோரும் இருந்தனர். பின்னர், மூவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்தேன். அவருடன் அரசியல் எதுவும் பேசவில்லை” எனத் தெரிவித்தார். “அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக காலம் வரும்போது சொல்கிறேன்” என்றும், “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை” எனவும் கூறினார். மேலும், “தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் வருவது உறுதி. விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்காக மாறாது” என விமர்சித்தார். “கூட்டம் வருவதை வைத்து தி.மு.க. – த.வெ.க. இடையேதான் போட்டி என விஜய் சொல்லக்கூடாது” என்று தமிழக வெற்றிக் கழக தலைவரை கடுமையாகச் சாடினார். இந்த சந்திப்பு மற்றும் கருத்துகள், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.