பெரம்பலூரில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில், அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு தொடர்பாக மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆதரவு தெரிவித்த கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் பேசிய போது, நடிகர் விஜய் குறித்து விளாசினார். “விஜய் பாஜகவின் கொள்கைக்கு எதிரியாம், திமுக அரசியலுக்கும் எதிரியாம். ஆனால், கொள்கைக்கும் அரசியலுக்கும் என்ன வித்தியாசம் என்பதை அவரே விளக்கத் தெரியவில்லை. தெரிந்தா பேசட்டும், இல்லையெனில் பேசவே கூடாது” என அவர் சாடினார்.
மேலும், விஜய்க்கு வரும் கூட்டத்தை வைத்து மக்கள் ஆதரவு என கருத வேண்டாம் என அவர் கருத்து தெரிவித்தார். “நயன்தாரா சேலத்தில் ஒரு நகைக்கடையின் திறப்புக்கு வந்த போது 60 ஆயிரம் பேர் கூடினார்கள். ஆனால் அதே நேரத்தில் பக்கத்தில் 40 விவசாயிகள் போராடியிருந்தபோதும், யாரும் பார்க்கவில்லை.
வடிவேலு, விஜயகாந்த் ஆகியோருக்கும் கூட்டம் வந்தது. முதல் நாள் முதல் காட்சிக்கு கூட்டம் வருவது சாதாரணம். படம் நன்றாக இருந்தால் அடுத்த காட்சிக்கும் கூட்டம் வரும். இல்லை என்றால் திரையரங்கமே காலியாகிவிடும். விஜய்யை பார்க்க கூட்டம் வரும். ஆனால், அவர் பேசுவதைக் கேட்பதற்காக கூட்டம் வராது” என்றார் சீமான்.
