தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது இரண்டாவது கட்ட பிரசாரத்தின் போது, திருவாரூர் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் விவசாயிகளின் அவலங்களை எடுத்துரைத்தார்.

குறிப்பாக, நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு ரூ.40 கமிஷன் வாங்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். “ஒரு டன்னுக்கு ரூ.1,000 வரை கமிஷன் வசூலிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தை வேறு யாரும் சொல்லியிருந்தால் நம்பமாட்டேன். இதை விவசாயிகளே கூறுகிறார்கள்.

அவர்களின் வாயிற்றில் அடித்தபடி ரூ.40-க்கு 40 என கமிஷன் எடுக்கப்படுகிறது. இது சி.எம்.சாரின் ஆட்சியில்தான் நடந்துள்ளது. இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டியுள்ளார்கள்” என அவர் வலியுறுத்தினார். மேலும், “எது நடைமுறையில் சாத்தியமோ அதைத்தான் தவெக வாக்குறுதியாக வழங்கும். பொய்யான வாக்குறுதிகளுக்கு எங்களிடம் இடமில்லை” என்றும் கூறினார்.

இதே நிகழ்வில், திருவாரூர் திமுக எம்எல்ஏ பூண்டி கலைவாணன், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், “விஜய் கூறியதைப் போன்று ரூ.40 முழுவதுமாக வாங்குவதில்லை. ஆனால், சும்மா ஏதோ வாங்குகிறாங்க, நான்தான் இல்லைன்னு சொல்லல. இது விவசாயிகள் விருப்பப்பட்டு தருவதாகவே இருக்கிறது.

அதிலும், லோடு மேன் மற்றும் இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்டுள்ள இந்த விவகாரத்தில் முதலமைச்சருக்கு தொடர்பில்லை” என மறைமுகமாக கமிஷன் விவகாரத்தை ஒப்புக்கொண்டார். இதனால், விவசாயிகளிடம் கமிஷன் வசூலிக்கப்படும் விவகாரம் மேலும் தீவிரம் பெற்றுள்ளது.