நாகை மாவட்டத்தில் நேற்று  நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் பெரும் வரவேற்புடன் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் அவரை காணும் ஆர்வத்தில் திரண்டிருந்தனர்.

இதற்கிடையில் எதிர்பாராத விதமாக ஒரு பரபரப்பு  நிலையை உருவாக்கியது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள், வடமாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபரை அடித்து உதைத்தனர். அவரை தாக்கியதன் காரணமாக, அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தின் பின்னணி என்னவெனில், ஒரு பெண் தனது மகளுடன் கூட்டத்திற்கு வரும்போது, தன்னுடைய கழுத்திலிருந்த 4 சவரன் நகை மர்மமாக பறிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். அந்த பெண், “வடமாநில வாலிபர்கள் நகையை கவனித்ததை பார்த்தேன். எனவே நகையை பையில் வைக்கச் சொன்னேன். பையில் இருந்த நகையை எடுத்துவிட்டனர். அந்த வாலிபர் மற்றொரு நபரிடம் நகையை கொடுத்துவிட்டார்” என அழுகையுடன் தெரிவித்தார்.

இந்த தகவலினால் கோபமடைந்த தவெக தொண்டர்கள், சந்தேகத்தின் பேரில் வாலிபரை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவரிடம் நகை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்தபோதும், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தற்போது, முழுமையான விசாரணைக்குப் பின் உண்மை என்ன என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.