பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இளைஞர் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக, வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, 20 முதல் 25 வயதுக்குட்பட்ட பட்டப்படிப்பு முடித்த ஆணும் பெண்ணுமாக உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கானது. இத்திட்டம் “முதலமைச்சரின் நிஷாத் சுயம்சய உதவித்தொகை திட்டம்” என்ற பெயரில் செயல்படுத்தப்பட இருக்கிறது. உதவித்தொகை மாதம் ரூ.1,000 என்ற அளவில், இரண்டு ஆண்டுகள் வழங்கப்படும் என நிதிஷ் குமார் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முந்தைய காலங்களில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற வேலையற்ற இளைஞர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்தத் திட்டம் கலை, அறிவியல் மற்றும் வணிகப் பிரிவைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதிய உயர்வு கிராமப்புற சுகாதாரத் தொழிலாளர்களுக்கான ஊக்கத்தொகை உயர்வு, மாணவர்களுக்கு கல்விக் கடன் வட்டி தள்ளுபடி உள்ளிட்ட பலவகை நலத்திட்டங்களையும் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார். மேலும் பீகார் மாநிலத்தில் இளம் தலைமுறையின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
