ரெயில் டிக்கெட் முன்பதிவு முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், மோசடியை தடுக்கவும் ரெயில்வே துறை புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
அதன்படி, வரும் அக்டோபர் 1, 2025 முதல், பொதுமக்களுக்கு வழங்கப்படும் முன்பதிவுக் கட்டணங்களில், முதல் 15 நிமிடங்களில் டிக்கெட் பதிவு செய்யும் பயணிகள் கட்டாயமாக IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். அந்த 15 நிமிட நேரத்தில், ஆதார் இணைப்புடன் இருக்கும் பயணிகளுக்கு மட்டுமே முன்பதிவுக்கு அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இந்த விதி தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கே இருந்த நிலையில், இப்போது பொதுமுன்பதிவு டிக்கெட்டுகளுக்கும் இந்தப் புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
உதாரணமாக, நவம்பர் 15 ஆம் தேதி பயணிக்க விரும்பும் பயணிகள், அதன் 60 நாட்களுக்கு முன்பு செப்டம்பர் 16 காலை 8 மணிக்கு முன்பதிவை தொடங்க வேண்டும். புதிய விதிகளின்படி, 8.00 மணி முதல் 8.15 மணி வரையிலான நேரத்தில் ஆதார் இணைந்த பயணிகளுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படும்.
இதனூடாக, அதிக கோரிக்கையுள்ள நேரங்களில் உண்மையான பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு, முயற்சி மற்றும் தொழில்நுட்ப மோசடிகளுக்கும் கட்டுப்பாடு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மூலம் வரிசை முறையில் டிக்கெட் பெறுவதில் நம்பகத்தன்மையும், நியாயமும் அதிகரிக்கும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
