திருவனந்தபுரம் அருகே பத்தனம்திட்டா மாவட்டத்தில் மனிதரைக் குலுக்கிய கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சரல்குன்னு பகுதியை சேர்ந்த ஜெயேஷ் (29) மற்றும் அவரது மனைவி ரஷ்மி (23) ஆகியோர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபர்களை உல்லாசம் என்ற பெயரில் வீட்டிற்கு அழைத்து, பின்னர் பணம், செல்போன் பறித்து, சித்ரவதை செய்துள்ளனர். இந்த சம்பவம் வெளிவந்ததும், இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அலப்புழையை சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாவில் தொடர்பு கொண்டு நெருக்கம் ஏற்படுத்திய ரஷ்மி, “உல்லாசமாக இருக்கலாம்” என்ற ஆசை வார்த்தை கூறி வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அதை நம்பி கடந்த 1ம் தேதி வந்த அந்த வாலிபர், வீட்டிற்குள் நுழைந்ததும் ரஷ்மியிடம் நெருங்க முயன்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கணவர் ஜெயேஷ், செல்போனில் வீடியோ எடுத்துவைத்திருக்கிறார்.
பின்னர், திடீரென அங்கு வந்த ஜெயேஷ், மனைவியுடன் சேர்ந்து வாலிபரை மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.6,000 மற்றும் விலை உயர்ந்த செல்போனை பறித்துள்ளனர். அதன் பின், அவரது கைகளை கட்டி மர்ம உறுப்பில் 26 ஸ்டேபிளர் பின்கள் அடித்து சித்திரவதை செய்துள்ளனர். மேலும், கை விரல் நகங்களை பிடுங்கி, வாயை துணியால் அடைத்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தூக்கி போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
அந்த வழியாக சென்ற ஒருவர் வாலிபரின் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இது தொடர்பான தகவல் ஆரன்மூளா போலீசாருக்கு கிடைத்ததும், அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர், ஜெயேஷ் மற்றும் ரஷ்மி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இதற்கு முன்பும் ஓணம் விழா அன்று, ரஷ்மி தனது வேலையிடத்தில் வேலை பார்த்த மற்றொரு வாலிபரையும் வீட்டுக்கு அழைத்து, பணத்தை பறித்து சித்ரவதை செய்திருந்தது தெரியவந்தது. சந்தேகத்திற்கு இடமில்லாமல் பணத்துக்காக காதல் வலையில் விழவைத்துப் பிறகு, கொடூரமாக சித்திரவதை செய்வதே இவர்களின் திட்டமென்று தெரிய வந்துள்ளது. தற்போது இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
