உத்தர பிரதேஷ் மாநிலம் கான்பூர் காவல்துறை, திருமண இணையதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த விஷ்ணு சங்கர் குப்தா (42) மற்றும் அவரது மனைவி ஆயுஷி குப்தா (33) ஆகியோரை நவாப்கஞ்சில் கைது செய்தது.
குற்றவாளி தன்னை நீதிபதி, IAS அல்லது IPS அதிகாரி எனக் கூறி, KGMC நர்சிங் அதிகாரியிடம் போலி சுயவிவரத்துடன் தொடர்பு கொண்டு, திருமண வாக்குறுதி அளித்து 59.50 லட்சம் ரூபாயை, சொகுசு கார் வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர் கான்பூரின் சிவில் லைன்ஸ் மாலுக்கு அழைக்கப்பட்டு, போலி நம்பர் பிளேட் காரில் பணம் பறிக்கப்பட்டு, சினிமா ஹாலில் இருந்து குற்றவாளி தப்பி ஓடினான்.
காவல்துறை 380-க்கும் மேற்பட்ட CCTV காட்சிகளையும் அழைப்பு விவரங்களையும் ஆய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்தது. கைது நேரத்தில் விஷ்ணு தனது வளர்ப்பு நாய்களை காவலர்கள் மீது தாக்கவிட்டான், ஆனால் காவல்துறை அதை கட்டுப்படுத்தி, 42.50 லட்சம் ரூபாயை மீட்டது.
ஆயுஷி, தானும் முதலில் இவனால் ஏமாற்றப்பட்டு, பின்னர் திருமணம் செய்து மோசடியில் பங்கேற்றதாக கூறினார். 10-க்கும் மேற்பட்ட பெண்களை இவர் ஏமாற்றியது தெரியவந்த நிலையில், காவல்துறை மற்ற பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய விசாரணையை தொடர்கிறது.
