பிரபல கன்னட நடிகர் உபேந்திரா ராவ் மற்றும் அவரது மனைவி பிரியங்காவின் செல்போன்கள் சைபர் மோசடி கும்பலால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ஆர்டர் டெலிவரி தொடர்பாக வந்த மர்மமான தொலைபேசி அழைப்பு மூலம், மோசடி கும்பல் அவர்களின் போன்களை ஹேக் செய்து, வாட்ஸ்ஆப் மூலம் தொடர்புகளுக்கு பணம் கேட்டு செய்திகள் அனுப்பியுள்ளது.

இதனால், உபேந்திராவின் சில நண்பர்கள் ரூ.2 லட்சத்திற்கும் மேல் இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடி குறித்து உடனடியாக சமூக வலைதளங்களில் எச்சரிக்கை விடுத்த நடிகர் தம்பதி, காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.

இது குறித்து உபேந்திரா கூறுகையில், “இன்று காலை என் மனைவி பிரியங்காவின் போனுக்கு, ஆன்லைன் ஆர்டர் டெலிவரி தொடர்பாக ஒரு அழைப்பு வந்தது. முகவரி கிடைக்கவில்லை எனக் கூறி, ஒரு குறியீட்டை அனுப்புமாறு கேட்டனர். சந்தேகம் ஏற்பட்டாலும், அவசரத்தில் அந்தக் குறியீட்டை அனுப்பியதால், எங்கள் இருவர் போன்களும் ஹேக் செய்யப்பட்டன.

பின்னர், எங்கள் வாட்ஸ்ஆப் மூலம் அவசர தேவைக்காக ரூ.55,000 அனுப்புமாறு செய்திகள் அனுப்பப்பட்டு, இரண்டு மணி நேரத்தில் திருப்பி தருவதாக மோசடி கும்பல் உறுதியளித்துள்ளது. இதை அறிந்தவுடன், சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தோம். எங்கள் எண்களில் இருந்து வரும் பணம் கேட்கும் செய்திகளை நம்ப வேண்டாம் என எச்சரிக்கிறோம்,” என்றார்.