மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், வேலை செய்யாமல் இருந்ததற்காக தந்தை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை சுத்தியலால் தலையில் தாக்கி, பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர் 60 வயதான மதபோதகர் அஜித் சிங் என அடையாளம் காணப்பட்டார். இந்த கொடூரமான கொலையை அரங்கேற்றிய இளைஞன், அமர்ஜித் சிங், நகரை விட்டு தப்பிக்க முயன்றபோது, ஜபல்பூர் ரயில் நிலையத்தில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டார்.
இந்த சம்பவம், மதோதால் பகுதியில் உள்ள மதர் தெரசா நகரில் நடந்ததாகவும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததை அடுத்து அயலவர்கள் காவல்துறையை அழைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவலர்கள் வந்து பார்த்தபோது, அஜித் சிங்கின் உடல் அழுகிய நிலையில், தலையில் கடுமையான காயங்களுடனும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் கிடந்தது.
விசாரணையில், அமர்ஜித் தனது தந்தையை ஆத்திரத்தில் கொலை செய்தது உறுதியானது. வேலை செய்யாமல் இருந்ததற்காக தந்தை தொடர்ந்து கண்டித்ததால், அமர்ஜித் இந்த பயங்கரச் செயலில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
