திரை இசை உலகில் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்த இசைஞானி இளையராஜாவை பாராட்டும் சிறப்புவிழா, தமிழக அரசின் சார்பில் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. “சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50” என தலைப்பிடப்பட்டிருந்த இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திரையுலக முன்னணி பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசியலில் ஒரு நட்சத்திரமாக, ஆளும் கட்சி மட்டுமல்ல, புதிய மற்றும் பழைய எதிர்க்கட்சிகளுக்கும் சவாலாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் என் நண்பர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என் வணக்கங்கள். 2026 தேர்தலில் ‘வாருங்கள் பார்க்கலாம்’ என புன்னகையுடன் சமாளிக்கிறார்,” என ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (த.வெ.க), 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வரும் விஜய்க்கு, இந்த உரை மறைமுகமாக பதிலளிப்பதாக பலர் இணையத்தில் கருத்துகள் பதிவு செய்து வருகின்றனர். அதாவது புதிய எதிரிகளையும் புன்னகையுடன் வாங்க 2026 தேர்தலில் சந்திக்கலாம் என்ற வகையில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக ரஜினி குறிப்பிட்டார். மேலும் இதில் புதிய எதிரி என்று நடிகர் விஜய்யை மறைமுகமாக அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
