கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போதைய அரசியல் சூழ்நிலையும், சுற்றுச்சூழல் கேடுகளையும் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இலட்சக்கணக்கான மக்கள் கூடும் நிகழ்வுகளை வைத்து ஒரு தலைவரின் ஆற்றல் மதிப்பீடு செய்யக் கூடாது என்று அவர் எச்சரித்தார். “விஜய்க்கு வரும் கூட்டத்தை விட நயன்தாராவுக்கு இன்னும் பெரிய கூட்டம் வரும். ரஜினி, அஜித் வந்தாலும் கூட்டம் வரத்தான் செய்யும். கூட்டம் என்பது ஒரு அளவுகோலல்ல,”திரையில் பார்த்த நடிகரை நேரில் பார்த்தால் மக்கள் கூட்டம் வரத்தான் செய்யும் என்றார்.

தன்னைப் புரிந்து கொள்ள இப்போது முடியாமலும், ஆனால் நெருக்கடியான நேரத்தில் தான் சொன்னது நினைவுக்கு வரும் என்றும் சீமான் கருத்து தெரிவித்தார். “நான் இப்போது சொல்வது உங்களுக்கு வேடிக்கையாகத் தோன்றும். ஆனால், நாளை இது உங்கள் வாழ்க்கையை பாதிக்கும்.
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு மலையை வெட்டி, மணலாக்கி, கல்லாக்கி, பெரிய வீடுகளை வைக்க நினைக்கிறீர்கள். ஆனால், நான் என் பிள்ளைகளுக்காக வாழக்கூடிய நாட்டை வைக்க விரும்புகிறேன்,” என்றார்.

“நான் சுவாசிக்க நல்ல காற்றை வைத்துவிட்டு சாகணும் என நினைக்கிறேன்.
கனிமக் கொள்ளையை தடுக்க ஒரே வழி – என்னை அதிகாரத்திற்கு கொண்டுவருவது. வேறு எந்த வழியும் இல்லை,” எனக் கூறினார். மேலும் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அவரது முதல் மற்றும் இரண்டாவது மாநாடுகளுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்த நிலையில் நேற்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட போதும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்தனர். இதைக் குறிப்பிட்டு தான் அஜித் மற்றும் நயன்தாரா வந்தால் கூட இதைவிட அதிகமான கூட்டம் வரும் என சீமான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
