மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்திருந்த ஆயுர்வேத கல்லூரி மாணவிக்கு விடுதியில் தங்கி இருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் உடல்நலக் காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்துள்ளார். இதற்காக அவர், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். அங்கு அவருடைய அறையில் நெட்ஒர்க் சரிவரக் கிடைக்காததால், அருகிலுள்ள மற்றொரு அறைக்குச் சென்றுள்ளார்.
அப்போது, அந்த அறையில் தங்கியிருந்த ஒரு நபர் அந்த மாணவியை கட்டிபிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. மாணவி சத்தமிட்டதை அடுத்து, குற்றவாளி தப்பிச் சென்றுள்ளார். மாணவியின் புகாரின் அடிப்படையில், சிந்தாதிரிப்பேட்டை போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் விசாரணையில், குற்றத்தில் ஈடுபட்டவர் செங்குன்றத்தைச் சேர்ந்த டிரைவர் சுகேந்திரன் (வயது 31) என தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், அவர்மீது ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் விசாரணையில் வெளியானது. கைது செய்யப்பட்ட சுகேந்திரன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் காவலில் வைக்கப்பட்டார்.
