ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்தவர்கள் யுகந்தர் – மவுனிகா தம்பதி. இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வரும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ரக்ஷித்ராம் என்ற மகன் இருந்தார். மவுனிகா இரவு நேர பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, தனது குழந்தையை அலுவலகத்திற்கு உடன் அழைத்துச் செல்வது அவரது வழக்கமாக இருந்தது. நேற்று முன்தினம், வழக்கம்போல் மவுனிகா தனது குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.
அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, குழந்தை ரக்ஷித்ராம் அங்கு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த ஒரு தண்ணீர் பாட்டில் மூடியை எடுத்து விழுங்கியதால், அது குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால் குழந்தை அலறி அழுததை அடுத்து, சத்தம் கேட்டு மவுனிகாவும், அலுவலக ஊழியர்களும் ஓடி வந்தனர். உடனடியாக குழந்தையை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை ரக்ஷித்ராம் உயிரிழந்தது.
இதைக் கண்டு குழந்தையின் தாய் மவுனிகா கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தைகள் விளையாடும் இடங்களில் பாட்டில் மூடிகள் போன்ற பொருட்களை வைக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
