மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில், சாலைகளில் உள்ள பள்ளங்களை “கொண்டாடும்” வகையில் மக்கள் தனித்துவமான போராட்டமொன்றை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

ஆயிஷ்பாக் ஹாக்கி மைதானம் அருகே உள்ள பகுதியில், கடந்த 10 ஆண்டுகளாக சாலைகளில் உள்ள குண்டும் குழியுமான பள்ளங்களால் அவதிப்பட்டு வரும் மக்கள், இந்தப் பிரச்னையை வெளிச்சத்திற்கு கொண்டுவர, சாலையில் கேக் வெட்டி, மேளதாளங்களுடன் போராட்டம் நடத்தினர்.

 

View this post on Instagram

 

A post shared by The Times of India (@timesofindia)

இந்த அசாதாரண போராட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.  போராட்டக்காரர்கள், ஒரு சிறப்பு கேக்கை கொண்டுவந்து, அதில் குழியில் மிதக்கும் தாமரை மலர்களையும், 10 ஆண்டுகளைக் குறிக்கும் மெழுகுவர்த்தியையும் வைத்திருந்தனர்.

கூடவே, சாமந்தி மலர்கள், ரோஜா இதழ்கள் மற்றும் பலூன்களை குழியில் வைத்து, மேளதாளங்களுடன் கோஷங்கள் எழுப்பினர். “இந்த சாலையில் தினமும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அரசு இதை சரிசெய்யாவிட்டாலும், குறைந்தபட்சம் இந்தப் பள்ளங்களின் ‘பத்தாம் ஆண்டு விழாவை’ எங்களுடன் கொண்டாடலாம்,” என்று ஒரு குடியிருப்பவர் கிண்டலாகத் தெரிவித்தார்.

பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இந்தப் போராட்டத்தை நடத்தியதாகவும், உடனடியாக சாலை பழுதுபார்க்கப்பட வேண்டும் என்றும், இல்லையேல் மேலும் தீவிர போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் குடியிருப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.