தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கேள்வி எழுப்பியுள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகள் நீட்டித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய வழக்கில், நடிகர் நம்பிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2024 மார்ச் 19ஆம் தேதியுடன் முடிவடைந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2024 செப்டம்பர் 8 அன்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை எதிர்த்து, தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை அமர்த்த வேண்டும் என்றும், தேர்தலை நடத்த நீதிபதியை ஆணையராக நியமிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் சங்கத்திடம் பதிலளிக்க உத்தரவிட்டு, இன்று விசாரணையை மேற்கொண்டது. அப்போது, “நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது?” என நீதிமன்றம் நேரடியாகக் கேள்வி எழுப்பியது.

இந்த வழக்கில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் தாக்கல் செய்த பதிலில் கூறப்பட்டதாவது: 60 சதவீதம் முடிக்கப்பட்டுள்ள புதிய சங்க கட்டடத் திட்டம் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளதால், தற்போதைய நிர்வாகம் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக பதவிக்கால நீட்டிப்பை நிறைவேற்றியுள்ளனர். தீர்மானத்திற்கு 300 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர், அதற்கான ஆவணங்கள் பதிவுத்துறையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

விதிகள் மீறப்படவில்லை, பொதுக்குழு கூட்டம் ஜனநாயக முறையில் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 2019ஆம் ஆண்டு தேர்தல் நடந்த போதும், வழக்கு காரணமாக 2022ல் தான் தற்போதைய நிர்வாகிகள் பொறுப்பேற்றதாகவும், மனுதாரர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்காமல், நேரடியாக வழக்கு தொடர்ந்ததையும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து இந்த வழக்கினை விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.