நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆவணப்படமான ‘நயன்தாரா: பியாண்ட தி பேரி டேல்’ (Nayanthara: Beyond The Fairy Tale) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த ஆவணப்படத்தை டார்க் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.
இத்துடன் தொடர்புடைய பிரச்சனை ஒன்றாக, முன்பே இந்த ஆவணப்பட டிரெய்லரில், ‘நானும் ரவுடிதான்’ படத்தின் 3 நிமிட காட்சிகள் இடம்பெற்றதாகக் கூறி, தனுஷின் வுண்டர்பார்ஸ் நிறுவனம், ரூ.10 கோடி நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் காட்சிகள், நயன்தாராவின் ஆவணப்படத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளன எனக் குற்றம் சாட்டி, ஏ.பி. இண்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடர்ந்துள்ளது.
தங்களது உரிமை இல்லாமல் பயன்படுத்தப்பட்ட சந்திரமுகி காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அதன்மூலம் ஆவணப்படம் ஈட்டிய வருவாயில் இருந்து ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (செப்.10) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மேலும் விசாரணை முடிவில், பதிலளிக்க டார்க் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு அக்டோபர் 6ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
